ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் செல்வது அல்லது நடைமேடை முனையை ஒட்டியது போலவே செல்வது என பலரும் ஆபத்தான முறையில் ரயில் நிலையங்களை பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
தண்டவாளங்களில், நடைமேடைகளில் மற்றும் ரயிலுக்குள் பயணிப்பது குறித்து பல வகையான விழிப்புணர்வுகளை மேற்கொண்டாலும் ஒரு சிலர் வேண்டுமென்றே செல்வதும், அலட்சியமாக செயல்பட்டு வருகிறார்கள். இது தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டாலும் திரும்ப திரும்ப இப்படியான சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.
அந்த வகையிலான ஒரு வீடியோதான் ட்விட்டரில் பகிரப்பட்டு பலரையும் கோபமடையச் செய்திருக்கிறது. அதில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளம் வழியாக நடைமேடையில் ஏற முயற்சித்திருக்கிறார். அப்போது அவர் அணிந்திருந்த செருப்பு கழன்று விழவே அதனை எடுத்துக் கொண்டு திரும்ப எண்ணிய போது மின்சார ரயில் நடைமேடையை நோக்கி வந்திருக்கிறது.
ரயில் வருவதை பார்த்து தண்டவாளத்துக்கு பக்கவாட்டில் இருக்கும் பாதையில் நிற்காமல் ரயில் கிட்டத்தில் வரும் போது நடைமேடையில் ஏறியிருக்கிறார். இதனை கண்ட ரயில்வே போலீஸ் முதலில் அவரை வர வேண்டாம் என தடுத்தும் அந்த நபர் ரயிலை முந்திக் கொண்டு நடைமேடையில் ஏறியிருக்கிறார். அவரை கைத்தாங்கலாக பிடித்த ரயில்வே போலீஸ் நடைமேடையில் இழுத்து போட்டதும் அவர் கண்ணத்திலேயே பளார் என அறைந்திருக்கிறார்.
இந்த வீடியோ Gabbarsing என்ற ட்விட்டர் பக்கத்தில், “கடைசியில் விட்ட அறைதான் மனசுக்கு இதமாக இருந்தது” என கேப்ஷனிட்டு பகிரப்பட்டிருக்கிறது. 22 நொடிகள் இருக்கக் கூடிய இந்த வீடியோ கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், “ஒருவேளை ரயில் ஓட்டுநருக்கும் அந்த வாய்ப்பு கிட்டியிருந்தார் அவர் ஒரு அறை விட்டிருப்பார்” , “வெறுமனே அடித்தால் மட்டும் போதாது, குற்றவழக்காக பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” , “இன்னும் இரண்டு அறை விட்டிருக்கலாம்” என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள்.