சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்திருக்கும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டியுள்ளார். இந்தத் திட்டத்தால், சேலம், தருமபுரி, காஞ்சிபுரம்,வேலூர், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டுமென்ற தனது கோரிக்கையை முதலமைச்சர் மறுத்தாகவும், திட்டத்தை எதிர்த்து வழக்கு போட்ட அன்புமணி ராமதாஸ் கூட தேர்தல் கூட்டணிக்குப் பிறகு இதுபற்றி பேசுவதை தவிர்த்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பின் மூலம் 5 மாவட்ட விவசாயிகளை உயர்நீதிமன்றம் காப்பாற்றியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இந்தத் தீர்ப்பு மரண அடி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றும், இந்த வாக்குறுதி அளிக்கப்படாவிட்டால், எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு எதிராக வழக்கு போட்ட பாமக, அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுமா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.