டிரெண்டிங்

இந்திய தேர்தல் முறையும் அதில் நடந்த மாற்றங்களும் என்ன?

இந்திய தேர்தல் முறையும் அதில் நடந்த மாற்றங்களும் என்ன?

webteam

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 10 ஆம் தேதி வெளிவந்தது. அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. தேர்தல் ஆணையம் இதற்கான முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. அதேபோல அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்திய தேர்தலில் இதுவரை செய்யப்பட்டுள்ள முக்கியமான சீர்திருத்தங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

வயது வரம்பு:

  1951-52 நாடாளுமன்றத் தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்கும் வயது வரம்பு 21 ஆக இருந்தது. இந்த வயது வரம்பை கடந்த 1988ஆம் ஆண்டு 61ஆவது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் 18 ஆக குறைக்கப்பட்டது.

                 
  
வாக்குப்பதிவு இயந்திரங்கள்:

  1951ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்குசீட்டு முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. 1989 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனால் 1998 ஆண்டில் சோதனை முயற்சியாக மூன்று மாநில தேர்தல்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவுக்காக இயந்திரங்கள் உபயோகிக்கப்பட்டன.

 அதன்பின் 1999ஆம் ஆண்டு கோவா மாநில தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு பிறகு 2000 ஆம் ஆண்டு முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தப்பட்டன.

வாக்காளர் அடையாள அட்டை:

   தேர்தல் ஆணையம் 1993 ஆம் ஆண்டு வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடிவெடுத்தது. அதன்பிறகு வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

வேட்பாளர்களின் பெயர் பட்டியல்:

  1996 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பதில் திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். அவை:
                  * அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள்
                  * பதிவுசெய்யப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள்
                  * சுயேட்சை வேட்பாளர்கள்
 இவ்வாறு பிரித்து வேட்பாளர்களின் பெயர்கள் அந்தந்த பிரிவுகளின் கீழ் அகரவரிசைப்படி அச்சடிக்கப்பட்டன.

வேட்பாளர் இறப்பு:

  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலுக்கு முன் இறந்துவிட்டால் அந்தத் தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்படும். இதனை 1996 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலுக்கு முன் இறந்துவிட்டால் தேர்தல் தள்ளிவைக்கப்படாது. அத்துடன் இறந்தவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் என்றால் அவருக்கு மாற்று வேட்பாளரை அறிவிக்க அக்கட்சிக்கு 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும்.

இடைத்தேர்தல்:
  அதேபோல 1996 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்துவதில் திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி ஒரு தொகுதி காலியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தலை நடத்த வேண்டும்.

ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகள் போட்டியிட முடியும்:
  ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதியை தேர்தல் ஆணையம்1996 ஆம் ஆண்டு முதல் கொண்டுவந்துள்ளது.

தபால் வாக்குகள்:
 தேர்தல் ஆணையம் 1999ஆம் ஆண்டு முதல் தேர்தலில் தபால் வாக்குகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்.

வேட்பாளர்களின் சொத்துகள் மற்றும் குற்றப் பட்டியல்:
 2003 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் மற்றும் குற்ற வழக்கு குறித்த தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்ற திருத்ததைக் கொண்டுவந்தது.

பிரெய்லி முறை வாக்குப்பதிவு இயந்திரங்கள்:
  தேர்தல் ஆணையம் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்க வசதியாக வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரெய்லி முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறை 2004ஆம் ஆண்டு சோதனை முயற்சியாக ஆந்திர மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் பிரெய்லி முறை வாக்குப்பதிவு இயந்திரங்களில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்தலில் நோட்டா:
  2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலில்  'நோட்டா (None Of The Above)' என்ற ஒன்றை வாக்குப்பதிவு இயந்திரத்தில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் செய்தது. அதன்படி தேர்தல் ஆணையம் 2014 ஆண்டு முதல் தேர்தலில் நோட்டா சேர்க்கப்பட்டது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் அறியும் வசதி:

 வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்தவர் பற்றி தெரிந்துகொள்ளும் முறையை தேர்தல் ஆணையம் 2013 ஆம் ஆண்டு முதல் சோதனை முறையில் அமல்படுத்தியது. அந்தவகையில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்த முறை சில தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டது. இது வரும் 2019 தேர்தலில் 543 தொகுதிகளிலும் பயன்படுத்தப்படவுள்ளது.