சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு புதிய தலைமுறையின் அக்னி பரிட்சை நிகழ்ச்சியில் பேசும்போது, இனிமேல் பாஜகவில் பெரியாரை யாராவது தரக்குறைவாக விமர்சித்தால் அதனை கண்டிக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன் தெரிவித்துள்ளார்,
அவரிடம், ’தமிழக பாஜகவில் பெரியாரிஸ்ட் என்று சொல்வதற்கான இடம் இருக்கிறதா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு
“மாற்றங்கள் வந்துக்கொண்டுதானே இருக்கிறது. எங்கள் மாநிலத் தலைவர் எல். முருகன் பெரியார் கொள்கைகள் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அதேபோல, பெரியாரின் எல்லா விஷயங்களையும் ஏற்றுக்கொண்டு நான் பேச வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பெரியாரை நான் பேசுவதற்கு முக்கிய காரணம் பெரியார் பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு குரல் கொடுத்தார். பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக கூடவே நின்றார். அதனால்தான், நான் பெரியாரிஸ்ட் என்கிறேன்.
மேலும், திமுக, அதிமுக கட்சிகள் பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராகத்தான் இருக்கின்றன. ஏனென்றால், பெரியார் தேர்தல் அரசியலே வேண்டாம் என்றார். அதேபோல, காங்கிரஸை பெரிய அளவில் எதிர்த்தவர் பெரியார். இனிமேல் பாஜகவில் பெரியாரை யாராவது தரக்குறைவாக விமர்சித்தால் அதனை கண்டிக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்” என்று கூறியுள்ளார்.