டிரெண்டிங்

குலசை தசரா விழா; நாளொன்றுக்கு 8,000 பக்தர்களுக்கு அனுமதி

குலசை தசரா விழா; நாளொன்றுக்கு 8,000 பக்தர்களுக்கு அனுமதி

JustinDurai

குலசை தசரா திருவிழாவிற்கு தினந்தோறும் 8 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

உலக பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் ஆலய திருவிழாவையொட்டி, குலசை தசரா விழா வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 27-ம்தேதி மகிசாசசூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் விழா முன்னேற்பாடு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், 

''144 தடையுத்தரவு நடைமுறையில் இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதி இல்லை. மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை.

தினந்தோறும் 8 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாகவோ நேரடியாகவோ பக்தர்கள் டிக்கெட் எடுத்து கொள்ளலாம். பக்தர்கள் ஆலயத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை.

கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை திடல் மற்றும் கடற்கரை செல்ல கண்டிப்பாக யாருக்கும் அனுமதி இல்லை. இந்த ஆண்டு ஆலய வளாகத்தில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

வேஷம் கட்டி விரதம் இருப்பவர்கள் அந்தந்த பகுதிகளில் குடிசை அமைத்து தங்கி கொள்ளலாம். அவர்கள் ஊரைவிட்டு வெளியே தர்மம் எடுக்க அனுமதி இல்லை.

தசராவிழா முடிந்ததும் அங்கேயே அவர்கள் காப்பு அறுத்து கொள்ளலாம். கோயிலுக்கு வேடம் அணிந்து வருபவர்கள், கச்சேரிகள் நடத்துபவர்கள் உள்ளிட்ட யாருக்கும் வர அனுமதி இல்லை.

தசரா விழாவிற்கு பாதுகாப்பாக 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் உடனடியாக வெளியேற வேண்டும். காப்பு கட்ட அனுமதிக்கப்பட்ட 400 குழுவினர் சார்பாக பிரதிநிதிகள் 2 பேர் காப்பு பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்படும். இதற்காக வரும் 7ம்தேதி முதல் 14 தேதி வரை குழுவினர் ஆன்லைனில் பதிவுசெய்து கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.