டிரெண்டிங்

மோடியை பாராட்டியதாக சர்ச்சை: சசிதரூர் விளக்கத்தை ஏற்றது கேரள காங்கிரஸ்

மோடியை பாராட்டியதாக சர்ச்சை: சசிதரூர் விளக்கத்தை ஏற்றது கேரள காங்கிரஸ்

rajakannan

பிரதமர் மோடியை பாராட்டியதாக சர்ச்சை எழுந்த நிலையில், திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் அளித்த விளக்கத்தை அம்மாநில காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.

சமீப காலமாக பாஜக அரசின் செயல்பாடுகளை எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு இருந்து வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் மோடி அரசின் செயல்பாடுகளை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக கண்டித்து பேசினர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் 370ஆவது பிரிவு நீக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் விமர்சித்துக் கொண்டிருந்தால் மக்கள் மத்தியில் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். மோடி அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும், விமர்சிக்க கூடாது என அவர் கூறினார். 

ஜெய்ராம் ரமேஷின் இந்த கருத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சசிதரூர் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆதரவு தெரிவித்திருந்தனர். மோடி கொண்டு வரும் திட்டங்களை பாராட்டுவதில் தயக்கமில்லை என்றும் மக்கள் ஏன் அவருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும் என்றும் சசிதரூர் தெரிவித்து இருந்தார்.

மோடி அரசை பாராட்ட வேண்டும் என கருத்து தெரிவித்தாக சசிதரூருக்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, கேரள காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சசி தரூரிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் கேரள காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மோடி அரசின் பல திட்டங்களை தொடர்ச்சியாக எதிர்த்து வருவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சசிதரூர் விளக்கம் அளித்து இருந்தார். அதில், பிரதமர் மோடியை தாம் பாராட்டவில்லை என்றும் கூறியிருந்தார். வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையை பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சசிதரூரின் விளக்கத்தை கேரள காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. சசிதரூரின் விளக்கம் திருப்தியாக உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தை இதற்குமேல் யாரும் தொடர வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, கேரள காங்கிரஸ் தன்னுடைய விளக்கத்தை ஏற்றுக் கொண்டது தமக்கு நிம்மளிப்பதாக சசிதரூர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தமக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.