பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலகம் செய்யுங்கள் என்று கூறிய தலித் தலைவரும் குஜராத் எம்.எல்.ஏவுமான ஜிக்னேஷ் மேவானி மீது கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சித்தரதுர்கா தொகுதி தேர்தல் அதிகாரி டி ஜெய்ந்த் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ஜிக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோடியை பற்றி ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக ஜிக்னேஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜிக்னேஷ், “இளைஞர்களின் பங்களிப்பு இன்று முக்கியமானதாக உள்ளது. பெங்களூரு நகரில் வரும் 15-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில், கூட்டத்தோடு கூட்டமாக இளைஞர்கள் கலந்து கொள்ளுங்கள். கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் நாற்காலிகளை தூக்கி எறிந்து, இடையூறு செய்யுங்கள். தேர்தலின் போது, 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறேன் என்று மோடி இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்தாரே அது என்ன ஆயிற்று என்று கேளுங்கள்” என்று கூறினார்.
அதோடு, “2 கோடி வேலைவாய்ப்பில் ஒவ்வொரு வருடமும் என்ன ஆயிற்று என்று கேளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை என்றால், இமயமலைக்கு சென்று தூங்கச் சொல்லுங்கள். அல்லது ராமர் கோயில் மணியை அடிக்க செல்லுமாறு கூறுங்கள்” என்றார் ஜிக்னேஷ்.
ஜிக்னேஷின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வருகின்ற மே 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜிக்னேஷ் பாஜகவுக்கு எதிராக கர்நாடக தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.