டிரெண்டிங்

என்னை பலிகடா ஆக்காதீர்கள் - குமாரசாமி அரசுக்கு கர்நாடக சபாநாயகர் எச்சரிக்கை

என்னை பலிகடா ஆக்காதீர்கள் - குமாரசாமி அரசுக்கு கர்நாடக சபாநாயகர் எச்சரிக்கை

rajakannan

தன்னை பலிகடா ஆக்க வேண்டாம் என்று முதல்வர் குமாரசாமி அரசுக்கு கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? கவிழுமா என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் மூன்றாவது நாளாக அம்மாநில சட்டப்பேரவை இன்று கூடியது.  தன் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் குமாரசாமி கடந்த வியாழக்கிழமை கொண்டு வந்தார். அந்த தீர்மானித்தத்தின் மீதான விவாதம் ஏற்கெனவே ஜூலை 18, 19 தேதிகளில் நடைபெற்றது. முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட அக்கட்சியினர் பேசினர். 

மூன்றாவது நாளாக இன்று நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்து இருந்தார். அதேபோல், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்க வேண்டிய அவசரம் இல்லை என்றும் அவர் கூறினார். மும்பை விடுதியில் உள்ள அதிருப்தி காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்கள் நாளை காலை 11 மணிக்கு தன்னுடைய அலுவலகத்தில் வந்து பார்க்குமாறு சபாநாயகர் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யக் கோரும் காங்கிரஸ் - மஜத தலைவர்களின் கோரிக்கை மீது இந்த சம்மனை அவர் அனுப்பியுள்ளார்.

காலையில் முதல்வர் குமாரசாமிக்கு சட்டசபைக்கு தாமதமாக வந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என்று சபாநாயகரிடம் முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்தார். அதேபோல், சபாநாயகரை சந்தித்த பாஜக தலைவர்கள் இன்றைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கூறினர்.

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்த வழியில்லை என சபாநாயகர் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “எம்.எல்.ஏக்கள் தங்களது பேச்சின் போது கண்ணியத்தை காக்க வேண்டும். நேரத்தை கடத்தும் தந்திரம் நடக்கிறது. அது சட்டசபையின் பெயரை களங்கப்படுத்துகிறது. நடைமுறைகளை தாமதப்படுத்துவதன் மூலம் என்னை பலிகடா ஆக்காதீர்கள்” என்று சபாநாயகர் பேசினார்.