டிரெண்டிங்

“நான் கூறியது சரித்திர உண்மை” - கோட்சே கருத்து குறித்து கமல் விளக்கம்

“நான் கூறியது சரித்திர உண்மை” - கோட்சே கருத்து குறித்து கமல் விளக்கம்

webteam

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து இரண்டு நாட்கள் கமல்ஹாசன் மேற்கொள்ள இருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், “நான் அரவக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். நான் கூறியது சரித்திர உண்மை. உண்மையே வெல்லும். என்னை நான் எப்போதும் தலைவனாக நினைத்தது இல்லை. என் வீட்டில் உள்ள அனைவரும் இந்துக்கள் தான். அவர்களை புண்படுத்தும் வகையில் பேச மாட்டேன்.  எனக்கு பல இடங்களில் பெருமை கிடைக்கிறது. சில இடங்களில் அவமானப்படுத்துகிறார்கள். 

நான் நினைத்திருந்தால் பயங்கரவாதி என்றோ, கொலைகாரன் என்றோ சொல்லியிருக்கலாம். மதச் செருக்கு, சாதிச் செருக்கு எங்கும் நிற்காது. நான் கலகத்தை விளைவிக்கிறேன் என்று கூறுவது என் உள்மனதை புண்படுத்துகிறது. நாங்கள் தீவிர அரசியலில் ஈடுபடுபவர்கள். தீவிரமாக பேசுவோம். பிரிவினையாக பேச மாட்டோம். என்னை அவமானப்படுத்த என்னுடைய கொள்கையை நீங்கள் கையில் எடுக்காதீர்கள். அப்படி கையில் எடுத்தால் தோற்றுப்போவீர்கள். இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி வீழ்த்துவோம். நான் மக்களை சந்திப்பதை தடுக்கப்பார்க்கிறார்கள். இதுபோன்ற விளையாட்டுகள் என்னிடம் வேண்டாம். இது வேண்டுகோள் அல்ல. அறிவுரைதான்.” எனப் பேசினார்.