காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் மே 19ல் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “காவிரி விவகாரம் தொடர்பாக மே 19ல் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின், விஜயகாந்த், தமிழிசை, தினகரன், வேல்முருகன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். சிலர் வருவதாக உறுதி அளித்துள்ளனர்.
அனைத்துக் கட்சி தலைவர்களும் சேர்ந்து நமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய சூழல் இது. தமிழக மக்களின் நலன் என்ற ஒரு கொள்கையின் கீழ் பல கட்சித் தலைவர்கள் இணையவேண்டும். ஆளுங்கட்சியை அழைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறேன். ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ரஜினியையும் அழைக்க உள்ளேன். 'காவிரிக்கான தமிழகத்தின் குரல்' என்பதே ஆலோசனை கூட்டத்தின் பெயர்” என்று கூறினார்.