எதற்குமே உதவாத நீஷமை பஞ்சாப் அணி ஏன் ஆடவைக்கிறது? என கொதித்தெழுந்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
நடப்பு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பேட்டிங், பவுலிங் என எந்தவகையிலும் தனது பங்களிப்பை அளிக்கவில்லை என்பது ரசிகர்களின் புலம்பலாக உள்ளது.
.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஜிம்மி நீஷமை ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார். சோப்ரா கூறுகையில்,
‘’பஞ்சாப் அணி நீஷமை தொடர்ந்து ஆடவைக்கிறது. வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரான அவர், பவர்ப்ளேயிலும் வீசுவதில்லை, டெத் ஓவரிலும் வீசுவதில்லை. பேட்டிங்கில் 4 அல்லது 5ம் வரிசையிலும் இறங்குவதில்லை; நல்ல ஃபினிஷரும் இல்லை; பெரிய பவர் ஹிட்டரும் இல்லை. பிறகு ஏன் தான் எதற்குமே உதவாத ஒரு வீரரை பஞ்சாப் அணி ஆடவைக்கிறது?'' என்று ஆவேசமாக கேள்விக்கணைகளை வீசினார்.
ஆகாஷ் சோப்ராவின் தன் மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஜிம்மி நீஷம், ‘’18.5 என்ற சராசரியுடன், 90 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் ஆடும் வீரரும் மேட்ச் வின்னர் அல்ல’’ என்று ஆகாஷ் சோப்ராவின் பேட்டிங் சராசரி மற்றும் ஸ்டிரைக் ரேட்டை சுட்டிக்காட்டி பதிவிட்டார் நீஷம்.
ஜிம்மி நீஷமின் பதிலடிக்கு பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா, ‘’மிகச்சரி என் நண்பரே. அதனால் தான் என்னை எந்த அணியும் எடுக்கவில்லை; வேறுவிதமாக நான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் பிரச்னை, எனது பேட்டிங் புள்ளி விவரமாகத்தான் இருக்கிறதே தவிர, எனது பார்வையிலிருந்து நீங்கள் முரண்படவில்லை. எஞ்சிய போட்டிகளில் நீங்கள் சிறப்பாக ஆட வாழ்த்துகள்’’ என்று தெரிவித்தார் ஆகாஷ் சோப்ரா.