அதிமுக என்ற பாண்டவர் அணியை சகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் சேர்ந்து எதும் செய்ய முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி அதிமுக கொறடா, சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, மூவருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதன் தொடர்ச்சியாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில், சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “அதிமுக என்ற பாண்டவர் அணியை சகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் சேர்ந்து ஏதும் செய்ய முடியாது. சகுனியான திமுக சூழ்ச்சி செய்யும். பாண்டவர்களான எங்களுக்கு சூழ்ச்சி செய்யத் தெரியாது. கட்சி , ஆட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும்போது நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாதது. மே 23 ஆம் தேதிக்கு பிறகு திமுகவும் அமமுகவும் நினைப்பது நிறைவேறாது.
தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் முழுமையான அளவில் உள்ளது. சமூகத்திற்கு நண்பனாக இருப்பதே பத்திரிகையின் சிறந்த கடமையாக இருக்க முடியும். உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.