டிரெண்டிங்

ஜெயலலிதா கைரேகையில் குளறுபடிகள்: மருத்துவர் சரவணன் குற்றச்சாட்டு

ஜெயலலிதா கைரேகையில் குளறுபடிகள்: மருத்துவர் சரவணன் குற்றச்சாட்டு

Rasus

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரிடம் இருந்து பெறப்பட்ட கைரேகையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த டாக்டர் சரவணன் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை இன்று தொடங்கினார். இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த சரவணனிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை ஆணையத்திடம் அளித்த மனுவின் அடிப்படையில் சரவணனிடம் ஓய்வு பெற்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்புக்கும், மருத்துவ அறிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாக விசாரணை ஆணையத்திடம் சுட்டிக்காட்டியதாக சரவணன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக கூடுதல் ஆவணங்களை விசாரணை ஆணையத்திடம் நாளை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் சரவணன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய சரவணன், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கான படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை தெளிவாக இல்லை என கூறினார். சுயநினைவோடு இருக்கும் ஒருவரிடம் பெறப்படும் கைரேகையில் அனைத்து வளைவுகளும் தெரியும்படி தெளிவாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் ஜெயலலிதாவின் கைரேகை தெளிவாக இல்லை என்றார். எனவே மருத்துவமனையில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றபோது அவர் சுயநினைவுடன் இல்லை என புகார் தெரிவித்தார். ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றது தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் இல்லை எனவும் சரவணன் குற்றம்சாட்டினார்.