சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு இடையே சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பேரவை அரங்கில் ஏற்கனவே 10 தலைவர்களின் உருவப் படங்கள் உள்ள நிலையில், 11ஆவதாக ஜெயலலிதாவின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அதை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே குற்றவாளியான ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது எனக் கூறி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சார்பில் வழக்கறிஞர் வில்சன் இந்த முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.