மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது கீழ்தரமான செயல் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோவை, டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று காலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 20 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ தற்போது உள்ள அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிடிவி ஆதரவாளர் வெளியிட்டுள்ள இத்தகைய வீடியோவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெ. மரணத்தை வைத்து அரசியல் செய்வது கீழ்த்தரமான செயல் என்று விமர்சித்துள்ளார். மேலும், தற்போது வெளியிட்டுள்ள ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை முன்னதாகவே வெளியிட்டிருந்தால், குழப்பங்களை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறினார். அதே போல் தேர்தல் ஆணையம் ஆர்கே நகரில், 6,000 ரூபாய் பணப்பட்டுவாடா செய்தபோதே, உரிய நடவடிக்கை எடுத்திருந்ததால், தற்போது இதுப்போன்ற செயல்கள் நடைப்பெற்றிருக்காது என்று கூறினார். தற்போது, ஜெ. சிகிச்சை பெற்ற வீடியோயை வெளியிட்டுள்ளவர்கள் மீது தேர்தல் ஆணையம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறிய அவர், ஆர்கேநகர் தேர்தலைப் பொறுத்தவரையில், தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்தார்.