டிரெண்டிங்

சட்டப்பேரவையில் மீண்டும் ‘ஜெ.ஜெயலலிதா என்னும் நான்’!

சட்டப்பேரவையில் மீண்டும் ‘ஜெ.ஜெயலலிதா என்னும் நான்’!

webteam

தமிழக அரசியலிலும் மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் வளர்ப்பும், ஜெயலலிதாவின் துணிவும் தான் அவரின் முக்கிய அஸ்திவாரம். எத்தனையோ நடிகைகள் வந்தாலும், ஜெயலலிதாவை தனி கவனம் செலுத்தி அரசியல் வாரிசாக உருவாக்கினார் எம்.ஜி.ஆர். 

சத்துணவு வாரியத் தலைவராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதா, பின்னர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு காலத்தின் கட்டாயத்தால் அதிமுக பொதுச் செயலாளரானார். 1991ல் தமிழக முதலமைச்சரான அவர், 1996 மற்றும் 2006ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார். இதற்கிடையே 2001ஆம் ஆண்டு முதலமைச்சரானார். பின்னர் மீண்டும் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் முதலமைச்சராக பணியாற்றியதன் மூலம், 40 ஆண்டுகளாக தமிழக அரசியலில் மட்டும் இன்றி இந்திய அரசியலிலும் பல மாற்றங்களையும், புதிய பயணத்தையும் உருவாக்கினார்.

2016ஆம் ஆண்டு செப்டம்பரில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிசம்பர் 5ஆம் தேதி இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். இந்த மிகப்பெரிய ஆளுமைக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்று, இன்றைய முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நாளை காலை தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க உள்ளனர். இதற்காக நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு பேரவைக் கூட்டம் கூட்டப்படவுள்ளது. அத்துடன் சிறப்பு கூட்டத்திற்கு எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இது ஒருபுறம் நடக்க, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள் என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஜெயலலிதாவின் படம் பேரவையில் வைக்கப்படும் என்ற செய்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.