டிரெண்டிங்

குடும்ப சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெற்றேன்: அமித்ஷா மகன் விளக்கம்

குடும்ப சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெற்றேன்: அமித்ஷா மகன் விளக்கம்

rajakannan

தனது நிறுவனம் சட்டப்படியே வணிக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், குடும்ப சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளதாகவும் பாஜக தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நரேந்திர மோடி பிரதமராகவும், அமித்ஷா பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஜெய் ஷாவின் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளதாக  ‘thewire’ என்ற இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

ஜெய் ஷா தாக்கல் செய்துள்ள வருமான ஆண்டறிக்கை தகவலின் படி அவரது நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் ரூ.80.5 கோடி  வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 2013 மற்றும் 2014 ஆம் வருடங்களில் ஜெய் ஷாவின் டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் நிறுவனம் ரூ.6,230 மற்றும் ரூ.1,724 நஷ்டத்தில் இயங்கி வந்தது. ஆனால், 2014-15 முதல் படிப்படியாக வருமானம் ஈட்டியுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஜெய் ஷா நிறுவனத்திற்கு நிதி மூலதனம் எங்கிருந்து கிடைத்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த செய்தி தேசிய அரசியலில் இன்று பேசு பொருளாக மாறியது. மோடி பிரதமரான பிறகு ஜெய் ஷா நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளதாக வெளியான செய்தி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ் கட்சி, இது குறித்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

அமித்ஷா மகன் நிறுவனம் தொடர்பான காங்கிரஸ் குற்றச்சாட்டு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “விதிகளின்படியே ஜெய் ஷா கடன் பெற்றுள்ளார். அமித்ஷா ஜெய் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட தனியார் இணையதள செய்தி நிறுவனம் மீது ஜெய் ஷா ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுப்பார்” என்றார்.

இணையதளத்தில் தனது நிறுவனம் பற்றி செய்தி வெளியானது குறித்து விளக்கம் அளித்துள்ள ஜெய் ஷா, தனது நிறுவனம் சட்டப்படியே வணிக நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். மேலும், “தனியார் நிதி நிறுவனங்களில் எனது குடும்ப சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளேன். முறைப்படி அதற்கான வட்டி செலுத்தப்படும்” என்றார்.