தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எஞ்சிய வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அக்கட்சிக்குள்ளாகவே பிரச்னை நீடிக்கும் நிலையில், கேரள காங்கிரஸிலும் உட்கட்சி பூசல் உச்சமடைந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. சுதாகரன், மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள வேட்பாளர்களை விட பணத்தை பெற்றுக்கொண்டுதான் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்தார். கேரள காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான சுதாகரனின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் இதேபோன்று அதிருப்தி தெரிவித்திருந்த கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் விஜயன் தாமஸ், அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். அதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் காங்கிரஸ் மூத்தத்தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பியுமான பிசி சாக்கோ, காங்கிரசில் இருந்து விலகியிருந்தார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் அதிருப்தியில் இருந்த கேரள மகிளா காங்கிரஸ் தலைவர் லத்திகா சுபாஷ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அத்துடன் நிற்காமல் கோட்டயத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்து தனது தலையை மொட்டையடித்துக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் இடதுசாரிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் வெற்றி வித்தியாசம் மிக சிறிய அளவில் இருக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறக்கூடிய நிலையில் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி பூசல்கள் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பினை குறைக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.