டிரெண்டிங்

நாடாளுமன்றத் தேர்தல்: மோடி, ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர் வேட்புமனுத்தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தல்: மோடி, ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர் வேட்புமனுத்தாக்கல்

webteam

தருமபுரி மக்களவை தொகுதியில் தேர்தல் மன்னன் என்றழைக்கப்படும் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். 

ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் உட்பட மொத்தம் 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய வருவோர், 4 பேருக்கு மேலாக வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை 27ம் தேதி நடைபெறும். 

வேட்பு மனுக்களை திரும்பப் பெற 29ம் தேதி வரை அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாளான நேற்று தமிழகத்தில் 20 பேர் மனுத்தாக்‌கல் செய்தனர். 

இந்நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்மராஜன், கடந்த தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். 1988ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட்டு வரும் இவர், இம்முறை தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது இவருடைய இருநூறாவது வேட்புமனு தாக்கல் என்பதும் இதன்மூலம் கின்னஸ் சாதனை படைக்கவும் முயற்சித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஒரு முறை நரசிம்மராவை எதிர்த்து வேட்புமனுத்தாக்கல் செய்தபோது தான் கடத்தப்பட்டதாக பத்மராஜன் தெரிவிக்கிறார்.