டிரெண்டிங்

அமைச்சர்கள் அதிகாரத்தை தடுக்கும் வகையில் கடுமையான விதிகள் வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர்கள் அதிகாரத்தை தடுக்கும் வகையில் கடுமையான விதிகள் வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

kaleelrahman

தேர்தல் பிரச்சாரங்களில் அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் கடுமையான விதிகளை வகுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வகுக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில், அமைச்சர்கள் தங்கள் அலுவல் சார்ந்த பணியுடன், தேர்தல் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், அரசு வாகனங்களை தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு பதவி வகிக்கும் அமைச்சர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி, அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமைச்சர்கள் தங்கள் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை என்பதால், அரசு சம்பளம் பெறும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் அஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே தேர்தல் நடத்தை விதிகள் உள்ளதாகவும், அதன் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளுக்கு இதுசம்பந்தமாக உரிய அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், தேர்தல் பிரச்சாரத்துக்கு, அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் கடுமையான விதிகளை கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விதிகளை தற்போதைய தேர்தலில் அல்லாமல், எதிர்வர இருக்கும் தேர்தல்களுக்கு அமல்படுத்தலாம் எனவும் தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.