டிரெண்டிங்

“கட்சியில் சேர்க்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்” - அழகிரி எச்சரிக்கை

“கட்சியில் சேர்க்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்” - அழகிரி எச்சரிக்கை

rajakannan

தங்களை கட்சியில் சேர்க்காவிட்டால் அதற்கான பின்விளைவுகளை தி.மு.க. சந்திக்க வேண்டியது இருக்கும் என்று மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். கருணாநிதி மறைந்து ஒரு வாரம் கூட முழுமையாக முடியாத நிலையில், ஸ்டாலின் தலைமை குறித்து மு.க.அழகிரி காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். அப்போது அழகிரியின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரிய அதிர்வலையை உருவாக்கியது. 

தனது ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிவிப்பேன் என்றார் அழகிரி. அதன்படி, கடந்த சில நாட்களாக அவர் மதுரையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். நான்காவது நாளாக தனது ஆதரவாளர்களை சந்தித்த அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, “திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது என்னை கட்சியில் இணைப்பதற்கு சிலர் தடுத்து வந்தனர். கருணாநிதி இருந்த வரை அமைதியாக இருந்தேன். தற்போது கருணாநிதி இல்லாததால் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எங்களை கட்சியில் சேர்க்காவிட்டால் பின்விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.என்னுடைய தலைமையில் தொண்டர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில்,  பேரணி நடைபெற உள்ளது” என்றார் அழகிரி. மேலும் ஸ்டாலின் செயல் தலைவராக பதவி ஏற்றப் போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு, அப்போது தலைவர் கலைஞர் உயிருடன் இருந்ததால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார். 

திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்குப் பிறகு, கடந்த 14ஆம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, திமுக பொதுக்குழுக்கூட்டம் நாளை (28ஆம் தேதி) நடைபெறவுள்ளது. நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில், மு.க.அழகிரி தொடர்ச்சியாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.