டிரெண்டிங்

அரசியல் பொறுப்பு அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன்: விவேக் பேட்டி

அரசியல் பொறுப்பு அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன்: விவேக் பேட்டி

webteam

அரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது தனது கடமை என சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் தலைமைச் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.

ஹிந்து ஆங்கில நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ள விவேக், வருமானவரி சோதனை வழக்கமான நடைமுறை என்றும், வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் போதுதான் அரசியல் நோக்கம் ஏதாவது இருந்ததா என தெரியவரும் என கூறினார்.

அரசியலில் நுழைவீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விவேக், ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டிவியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் நாளை வேறு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டால் அதை செய்யவேண்டியது தமது கடமை எனவும் விவேக் குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் மரணம் பல விஷயங்களை மாற்றியிருப்பதாக விவேக் தெரிவித்தார். தாம் முன்பு போல் மகிழ்ச்சியாக இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் நேர்மையாக நடந்துகொள்கிறார்களா இல்லையா என்பதை தன்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். நிறைய பேர் தம்முடன் பழகும் முறையை மாற்றிக்கொண்டிருப்பதாக கூறினார்.

மன்னார்குடி குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருப்பது பின்னடைவாக உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விவேக், தான் வளர்ந்த முறையால் மற்றவர்களின் அணுகுமுறையிலிருந்து தனது அணுகுமுறை மாறுபட்டிருக்கக்கூடும் என்றாலும், தான் மன்னார்குடி குடும்பத்தின் ஒரு அங்கம்தான் என்றும் விவேக் கூறியுள்ளார்.