கணவன், கல்லூரி மாணவியுடன் சென்றதால் விரக்தியடைந்த மனைவி இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு அபிஷேக், அபிருத் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முத்து, ரெத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி விஜயலட்சுமி கமலி என்பவருடன் தகாத தொடர்பில் இருந்துள்ளார். இந்த தொடர்பு முத்துவின் மனைவி ராதாவிற்கு தெரிந்து, கடந்த சில நாட்களாக கணவன் மனைவியிடையே சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முத்து, விஜயலட்சுமியை கடத்தி சென்றுவிட்டார். இதைஅறிந்த அக்கம்பக்கத்தினர் அசிங்கமாக பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராதா படுக்கை அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு இரண்டு மகன்கள் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
அப்போhது ராதா மற்றும் அவரது குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர்களான சத்தியமூர்த்தி மற்றும் ஆனந்த் இருவரும் பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராதா மற்றும் இளைய மகன் அபிருத் இருவரும் முழுவதுமாக எரிந்து இறந்த நிலையில் மூத்த மகன் அபிஷேக் உயிருக்கு போராடியுள்ளான்.
அவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அபிஷேக்கிற்கு முதலுதவி செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அபிஷேக் உயிரிழந்தான்.
தாய் மற்றும் மகனை காப்பாற்ற முயன்ற உறவினர்கள் சத்தியமூர்த்தி மற்றும் ஆனந்த் ஆகியோர் தீக்காயங்களுடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த மூவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியுடன் சென்ற ராதாவின் கணவர் முத்து எங்கு இருக்கின்றார் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார், மூன்று பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த முத்துவை தேடி வருகின்றனர். குடும்பத் தலைவனின் தவறான நடத்தையால் ஒரு குடும்பமே சிதைந்து போனது, ஊர் மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.