டிரெண்டிங்

நாளை குஜராத், இமாச்சல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

நாளை குஜராத், இமாச்சல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

webteam

பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. காலை 8 மணிக்கு ‌வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், 11 மணிவாக்கில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது தெரிய வரும். குஜராத் மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட 52 கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 1,828 பேர் இதில் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியலை எதிர்த்து பாரதிய ஜனதாவின் பரப்புரை அமைந்தது. மதவாதம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பாதிப்புகளை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சி பரப்புரை செய்தது. பட்டிதார் அமைப்பின் ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்திருந்தார். மேலும் தலித் செயற்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டதுடன் அக்கட்சிக்கு ஆதரவாகவும் இருந்தார். இதனால் தேர்தலில் கடும்போட்டி நிலவியது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில் 68.41% வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2012 தேர்தலை விட 3 சதவிகிதம் குறைவாகும்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 68 தொகுதிகளில் 338 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்வர் வீரபத்ரசிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியும் கடுமையாக மோதின. 75 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இரு மாநிலங்களில் நாளை நடைபெறும் வாக்கு ‌எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.