டிரெண்டிங்

சும்மா இருந்த ஹாக்கருக்கு அசால்ட்டாக 2 கோடியை அள்ளிக்கொடுத்த கூகுள்.. ஏன் தெரியுமா?

சும்மா இருந்த ஹாக்கருக்கு அசால்ட்டாக 2 கோடியை அள்ளிக்கொடுத்த கூகுள்.. ஏன் தெரியுமா?

JananiGovindhan

சாஃப்ட்வேர்களில் மென்பொருள் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு கூகுள் போன்ற பெரு நிறுவனங்களுக்கு சன்மானம் வழங்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் எதுவுமே செய்யாத சைபர் செக்யூரிட்டி பொறியாளருக்கு 2,50,000 அமெரிக்க டாலரை அதாவது இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் அனுப்பியிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக ஹாக்கரும் சைபர் செக்யூரிட்டி நிபுணருமான சாம் கர்ரி என்ற அந்த நபர் தனது ட்விட்டர் பக்கத்தில், “2,49,999 அமெரிக்க டாலர்களை கூகுள் எனக்கு அனுப்பி மூன்று வாரங்கள் ஆகிறது. ஆனால் எதற்காக என் வங்கி கணக்குக்கு அனுப்பினார்கள் என தெரியவில்லை. இது தொடர்பான கூகுள் நிறுவனத்தை தொடர்புகொள்ள எந்த வழியும் இருக்கிறதா?” எனக் குறிப்பிட்டு கூகுளில் இருந்து பெறப்பட்ட பணம் குறித்த ஸ்க்ரீன் ஷாட்டையும் சாம் கர்ரி பகிர்ந்திருக்கிறார்.

சாம் கர்ரியின் இந்த ட்வீட் வைரலாகவே, கூகுள் இது குறித்து விளக்கமளித்திருக்கிறது. அதில், “அதிகாரியின் தவறு காரணமாக தவறுதலாக பணம் அனுப்பப்பட்டிருக்கிறது. எங்கள் கவனத்திற்கு இதை கொண்டு வந்ததற்கு நன்றி. இதை சரி செய்ய என்ன வழி என்பதை பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

YUGA லேப்ஸ் என்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பொறியாளராக இருக்கும் சாம் கர்ரி கூகுள் உட்பட பல மென்பொருள் நிறுவனங்களுக்கு பக் ஃபிக்சிங் வேலையை செய்து அதற்கான வெகுமதிகளை பெற்றிருக்கிறார். இருப்பினும் தான் எந்த பிழையும் கண்டுபிடிக்காத போது 2 கோடி ரூபாயை கூகுளில் இருந்து வழங்கப்பட்ட போதும் அதில் ஒரு காசை கூட கர்ரி செலவு செய்யவில்லையாம்.