டிரெண்டிங்

ஈரோட்டில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார் - வைகோ

ஈரோட்டில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார் - வைகோ

webteam

ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தச் சூழலில் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அந்தந்த அரசியல் கட்சிகள் பேசி வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடும் நிறைவடைந்தது. 

அதன்படி மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிளும் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக நேற்று அறிவித்தது. அதன்படி வைகோ-வின் ம.தி.மு.க ஈரோடு தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் மதிமுக பொருளாளரான அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிடுவார் என  வைகோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் மார்ச் 19-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.