டிரெண்டிங்

நடிகை ஜெயப்பிரதா குறித்து அவதூறு கருத்து: சமாஜ்வாதி தலைவர் மீது வழக்கு

நடிகை ஜெயப்பிரதா குறித்து அவதூறு கருத்து: சமாஜ்வாதி தலைவர் மீது வழக்கு

webteam

ஜெயப்பிரதா குறித்து அருவருப்பான கருத்தைத் தெரிவித்ததாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆசம்கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தமிழில், மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஜெயப்பிரதா. 80-களில் முன்னணி ஹீரோயினாக இருந்த இவர், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். ஆந்திராவில் தெலுங்கு தேசக் கட்சியில் சேர்ந்த அவர், பின்னர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா, உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் இப்போது போட்டியிடுகிறார். இதே தொகுதியில் அவர் இரண்டு முறை சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் இப்போது சமாஜ்வாடி கட்சி சார்பில் மூத்த தலைவர் அசாம் கான் போட்டியிடுகிறார். இவருக்கும் ஜெயப்பிரதாவுக்கும் ஏழாம் பொருத்தம். இவரால்தான் சமாஜ்வாதி கட்சியில் இருந்து ஜெயப்பிரதா விலகியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராம்பூர் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது நேற்று பேசிய ஆசம்கான், ‘’ ஜெயப்பிரதாவின் உண்மை முகத்தை அறிய உங்களுக்கு 17 வருடங்கள் ஆனது. ஆனால் பதினேழு நாளிலேயே அவர் அணிந்திருப்பது காக்கி நிற உள்ளாடை என்பதை புரிந்துகொண்டேன்’’ என்றார். இந்தப் பேச்சு சர்ச்சையானது. இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதுகுறித்து பேசிய ஜெயப்பிரதா, ‘’ஆசம் கான் என்னைப் பற்றி பேசுவது ஒன்றும் புதிதில்லை. நான் பெண் என்பதால் அவர் சொன்னதை திருப் பிச் சொல்லக் கூட என்னால் முடியவில்லை. அவருக்கு நான் என்ன செய்தேன் என்றும் தெரியவில்லை. தொடர்ந்து இதே போன்று என்னை வசைபாடி வருகிறார். இவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.

ஏனென்றால், இந்த மனிதர் வெற்றி பெற்றால், ஜனநாயகம் என்ன ஆகும்? சமூகத்தில் பெண்களுக்கு எந்த இடமும் இல்லை. நாங்கள் எங்கே செல்வது? நான் இறந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியா? இதற்காக நான் பயந்து ராம்பூரில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று நினைக்கிறீர்களா? இதற்கெல்லாம் பயப்படமாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயப்பிரதா குறித்து அவதூறாகப் பேசியதற்காக ஆசம்கான் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேசிய மகளிர் ஆணையமும் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.