பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் போரிட வேண்டுமே தவிர, மதங்களுக்கு எதிராக அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
டெல்லியில் இஸ்லாமிய பாரம்பரியம் தொடர்பான மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடி கலந்து பேசுகையில், மதத்தின் பெயரில் இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்துவதை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், “இந்தியா அனைத்து முக்கிய மதங்களுக்கும் தொட்டிலாகத் திகழ்கிறது. இந்திய ஜனநாயகம் பன்முகத்தன்மையை அடிப்படையாக கொண்டது. அனைத்து மதங்களும் மனிதத் தன்மையையே ஊக்குவிக்கிறது” என்றார் மோடி.
பின்னர் பேசிய ஜோர்டான் மன்னர் அப்துல்லா, மத நம்பிக்கையும், மனிதாபிமானமும் இணைந்து செயலாற்ற வேண்டும் எனக் கூறினார். வெறுப்புணர்வை வளர்க்கும் பேச்சுக்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.