டிரெண்டிங்

துரைமுருகன் இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை: திடீர் திருப்பம்

துரைமுருகன் இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை: திடீர் திருப்பம்

rajakannan

திமுக பொருளாளர் துரைமுருகனிடம் தேமுதிக நிர்வாகிகள் சிலர் ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. நேற்றைய தினமே தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எனினும் தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையும் என பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் கூறி வந்தனர்.

இன்று சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு பரப்புரையை தொடங்குகிறார். இந்தப் பொதுக்கூட்டத்திற்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில்,  கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் பேச்சுவார்த்தையில் இழுப்பறி நிலவியதால் விஜயகாந்த் படம் மட்டும் இடம்பெறாமல் இருந்தது.

இதையடுத்து கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து அதிமுக கூட்டணி குறித்த பொதுக்கூட்டத்தின் மேடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் படம் இடம்பெற்றது. தேமுதிக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும் அதிமுக விஜயகாந்தின் படத்தை வைத்துள்ளது. அதனால், கூட்டணி உறுதியாகிவிடும் என்று கருதப்பட்டது. 

இந்நிலையில், இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் சிலர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள துரை முருகன் இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால், திடீர் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்த தேமுதிக நிர்வாகிகள் தனிப்பட்ட விஷயம் பேசுவதற்கு வந்ததாக கூறினார்.