டிரெண்டிங்

இன்று காலை 11 மணிக்கு தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்!

இன்று காலை 11 மணிக்கு தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்!

webteam

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.கொரோனா காரணமாக முதன்முறையாக அச்சு வடிவில் இல்லாமல், மின்னணு முறையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு மற்றும் பொது முடக்கம் காரணமாக பொருளாதாரம் எதிர்மறை நிலைக்கு சென்ற நிலையில் அரசின் வருவாய் வெகுவாக சரிந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை, கடன் ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. இந்தச் சூழலில் கொரோனா கால பாதிப்புகளில் இருந்து மீளும் வகையில் சாமானிய மக்களில் இருந்து சிறு, குறுந் தொழில்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டிய அவசியமும் உள்ளது.

ஒருபுறம் குறைவான வருவாய், மறுபுறம் அதிகரித்துவிட்ட செலவினங்கள் என்ற இக்கட்டான சூழலில் இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். வருமான வரி விகிதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகரிக்கும் செலவுகளை சமாளிக்க அதிக வருவாய் பிரிவினருக்கு கோவிட் செஸ் என்ற பெயரில் கூடுதல் வரி விதிப்பு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சுகாதாரம், கட்டமைப்பு, கல்வி ஆகிய துறைகளுக்கு இம்முறை அதிக முக்கியத்துவம் தரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் இந்த பட்ஜெட் முதல்முறையாக மின்னணு வடிவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன்படி பட்ஜெட் உரை வழக்கம் போல் புத்தக வடிவில் தயாரிக்கப்படாமல் மின்னணு வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உரையை கணினி திரையை பார்த்து நிதியமைச்சர் படிக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மின்னணு திரையில் பட்ஜெட் தகவல்களை பார்த்து தெரிந்துகொள்வார்கள்.