துணி துவைக்கும் போது அவ்வப்போது சில குளறுபடிகள் நடப்பதுண்டு. குறிப்பாக வாஷிங் மிஷினில் துணி துவைப்பதென்றால் சொல்லவே வேண்டாம். மற்ற துணிகளோடு சேர்த்து வெள்ளை ஆடைகளையும் போட்டுவிட்டால்போதும் கலர்ஃபுல் துணியாகவே மாறிவிடும். இதுபோக சின்ன பொருட்களும் துணிகளில் சிக்கிக் கொண்டால் அது அந்த மிஷினையே பழுது பார்த்துவிடும். இப்படியான பல சம்பவங்கள் வாஷிங் மிஷின் பயன்படுத்தும்போது நிகழ்வதுண்டு.
அதன்படி, தவறுதலாக முழு ஷாம்பூ பாட்டிலை துணியோடு சேர்த்து வாஷிங் மிஷினில் போட்டதால் அந்த குடும்பத்தினர் சந்தித்த அனுபவம் சொல்லில் அடங்காது என்பது தற்போது வைரலாகியிருக்கும் வீடியோவை பார்த்தே தெரிந்துகொள்ள முடியும்.
துவைப்பதற்கு துணிகளை வாஷிங் மிஷின் போட்ட சில நிமிடங்களிலேயே அதிலிருந்து சோப்பு நுரை மேகக் கூட்டத்தை போல வெளியேறிக் கொண்டே இருந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குடும்பத்தினர் என்னவென்று பார்த்தபோதுதான் தவறுதலாக ஷாம்பூ பாட்டில் போடப்பட்டதை உணர்ந்திருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில் நுரையை உறிஞ்சுவதற்கு துணியை வைத்து அடைத்தும் நுரை வழிவது நின்றபாடில்லை. இதனாலே அந்த வீடே களேபரமாகியிருக்கிறது. இந்த வீடியோ Now this news-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டதோடு, “இது அனைவருக்கும் ஒரு பாடம். எக்காரணம் கொண்டும் ஷாம்பூ பாட்டிலை வாஷிங் மெஷினில் போட்டு விடாதீர்கள்.” என கேப்ஷனும் இடப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் “இதுபோன்று எனக்கும் நடந்திருக்கிறது. துணி துவைக்கும் சோப்புக்கு பதிலாக பாத்திரம் தேய்க்கும் டிஷ்வாஷரை போட்டிருக்கிறேன்.” என்றும், “அது எப்படி தவறுதலா முழு ஷாம்பூ பாட்டில் வாஷிங் மிஷின்ல போட்டிருப்பாங்க?” என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், இது குழந்தைகளின் வேலையாகத்தான் இருக்கும் என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.