டிரெண்டிங்

“ஜெயலலிதாவையே நேருக்கு நேர் எதிர்கொண்டவன் நான்” - ஈவிகேஎஸ் இளங்கோவன்

“ஜெயலலிதாவையே நேருக்கு நேர் எதிர்கொண்டவன் நான்” - ஈவிகேஎஸ் இளங்கோவன்

webteam

முதல்வராக இருந்த ஜெயலலிதாவையே எதிர்கொண்ட நான் தேர்தலில் யாரையும் போட்டியாக கருதவில்லை எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மற்றும் தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட தொடங்கிவிட்டன. 

இதையடுத்து திமுக தலைமையில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை நள்ளிரவில் அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 10 தொகுதிகளில் சிவகங்கையை தவிர்த்து மற்ற 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.

இதில் காங்கிரஸ் சார்பில் தேனி தொகுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத்தும் அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் புதிய தலைமுறை நிருபரிடம் கலந்துரையாடினார். அப்போது அவர், “ தேனி மக்களவைத் தொகுதியில் பிற வேட்பாளர்களை நான் போட்டியாக கருதவில்லை. சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை. என்னை பொறுத்தவரையில் மக்களின் குறைகளை அறிந்து அதை தீர்ப்பதற்காக பாடுபடுகின்ற ஒரு அரசியல்வாதியாக இருக்கின்றேன். 

50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கரைபடாத கரங்களுக்கு சொந்தக்காரனாக இருக்கின்றேன். தேனியில் போட்டியிடுவதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய வெற்றியை பெறுவேன். காரணம் மதவாத சக்திகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று மக்கள் முடிவெடுத்துள்ளனர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரையே நேருக்கு நேர் எதிர்கொண்டேன். தற்பொதைய முதல்வர், துணை முதல்வரை கண்டு அஞ்சப்போவதில்லை. அவர்களை அவர்கள் இடத்திலேயே தோற்கடிப்பேன்” எனத் தெரிவித்தார்.