நியூட்டனுக்கு பதிலாக ஐன்ஸ்டீன் பெயரை கூறியது குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலை குறித்து நேற்று பேசிய பியூஸ் கோயல், “பொருளாதாரத்தின் அனைத்தையும் டிவி-யில் காண்பவற்றை வைத்து கணக்கு போடாதீர்கள். நாடு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நிலையை அடைய வேண்டுமென்றால் 12 சதவிகித வளர்ச்சியுடன் செல்ல வேண்டும். ஆனால் தற்போது 6-7% வளர்ச்சி தான் இருக்கிறது. எனவே கணக்கை இதில் பொருத்தாதீர்கள். இந்த கணக்குகள் ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிய உதவில்லை” என்று கூறினார்.
புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்தது நியூட்டன். ஆனால் பியூஸ் கோயல் ஐன்ஸ்டீன் எனக் கூறிவிட்டார். இந்த விவகாரம் நேற்று சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஹேஷ் டேக்குகள் சமூக வலைத்தளங்களில் நேற்று ட்ரெண்டானது.
இந்நிலையில், தன்னுடைய தவறினை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஒப்புக் கொண்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இன்று பேசிய கோயல், “ஒவ்வொருவரும் தவறு செய்வது இயல்புதான். தவறை கண்டு பயப்படுபவன் நான் அல்ல” என்று கூறியுள்ளார்.