டிரெண்டிங்

“202வது முறையாக வேட்புமனு தாக்கல்..இதுவரை 30 லட்சம் செலவு” : தேர்தல் மன்னன் பத்மராஜன்

“202வது முறையாக வேட்புமனு தாக்கல்..இதுவரை 30 லட்சம் செலவு” : தேர்தல் மன்னன் பத்மராஜன்

webteam

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் 202 வது முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இந்தமுறை திருப்பரங்குன்றத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதிக அளவில் தோல்விகளை சந்தித்த வேட்பாளராக உள்ள பத்மராஜன் பல்வேறு தொகுதிகளுக்கான சட்டமன்றம், நாடாளுமன்றத் தொகுதி மட்டுமல்ல பிரதமர் மோடி, ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார். 

மக்களவை தேர்தலில் 31 முறையும், மாநிலங்களவை தேர்தலில் 40 முறையும், சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் 64 முறையும், சட்டமன்ற மேலவை பதவிக்கு 2 முறையும் போட்டியிட்டுள்ளார். மேலும் குடியரசு தலைவர் தேர்தலுக்காக அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களையும் எதிர்த்து போட்டியிட்டுள்ளார். இதுவரையிலும் எந்த தேர்தலிலும் வெற்றி பெறாத இவர், இதுவரை தேர்தலுக்காக ரூபாய் 30 லட்சம் வரை செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தொடர்ந்து பல்வேறு தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு வரும் நிலையில் இவரின் செயற்பாடுகள் குறித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பத்மராஜன் கூறும்போது, “இதுவரை நான் 202 முறை வேட்பாளராக போட்டியிட்டுள்ளேன், முன்னாள் பிரதமர் வாஜ்பாய். மன்மோகன் சிங், குஜ்ரால், மோடி ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டேன். முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி, ராஜசேகர ரெட்டி உள்ளிட்டோரை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். தேர்தலில் போட்டியிடுவது மட்டுமே நோக்கம். வெற்றி பெறுவதல்ல, அது எனக்கு தாங்காது. இதுவரை தேர்தலுக்காக சொந்த பணத்தில் ரூபாய் 30 லட்சம் செலவு செய்துள்ளேன்”என கூறினார்