டிரெண்டிங்

வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி முகாம்... முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி முகாம்... முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

webteam

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23 ஆந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி முகாமை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று நடத்துகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைகான முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி முகாம்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் இந்தியத் தேர்தல் ஆணையாளர் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு வாக்கு எண்ணிக்‌கை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கின்றனர். 

மேலும் இந்த பயிற்சியில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ‌, கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் மாவட்ட அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தைப் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிடவுள்ளனர்.