டிரெண்டிங்

பாமகவுடன் கூட்டணி ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

பாமகவுடன் கூட்டணி ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

webteam

பாமகவுடன் கூட்டணி ஏன் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்றத்தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அதிமுகவையும் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்த பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது குறித்து பல மட்டங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் ஜெயலலிதாவை விமர்சித்த பாமகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்திருப்பது ஏன் எனப் பல்வேறு தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதனிடையே இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ், “அப்போது இருந்த சூழல் வேறு. தற்போது உள்ள சூழல் வேறு. அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறியது உண்மைதான். ஆனால் தற்போது சூழல் மாறிவிட்டது. விமர்சனங்களை வைத்து பார்த்தால் இந்தியாவில் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்க முடியாது. ஆளுநரிடம் தமிழக அரசு மீது தந்த புகாரை திரும்ப பெறவில்லை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. கூட்டணி சேர்வதால் பாமக கொள்கைகளிலிருந்து எள்ளளவும் பின்வாங்காது. தமிழக அரசு மீதான குட்கா புகாரில் உண்மையிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பாமகவுடன் கூட்டணி ஏன் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.  “கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது மாறி மாறி வைக்கப்படுவது சகஜம்தான். தேர்தல் வரும்போது அந்தந்த கட்சிகள் வெற்றி பெற வேண்டும். அந்த அடிப்படையில்தான் கூட்டணி வைத்துள்ளோம்.

கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேசி வருகிறோம். அவர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தேமுதிகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேமுதிக வராவிட்டால் கவலையில்லை என ஜெயக்குமார் கூறியதை நான் பார்க்கவில்லை. எங்களை பொறுத்தவரை மெகா கூட்டணி அமைத்து நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். 

விரைவுச்சாலை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. தீர்ப்பு வந்ததும் தான் அதுகுறித்து கருத்து சொல்ல முடியும். டிடிவி தினகரன் கட்சி 38 தொகுதிகளில் போட்டியிட்டால் என்ன? நாடு முழுவதும் போட்டியிட்டால் எங்களுக்கு என்ன?. அதிமுகவும் பாமகவும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி. அதற்கான ஒப்பந்த பத்திரமும் கையெழுத்தாகிவிட்டது” என்றார்.