டிரெண்டிங்

நடு ரோட்டில் பைக் ஸ்டண்ட் செய்த ரோமியோவை தோப்புக்கரணம் போட வைத்த டிராஃபிக் போலீஸ்!

நடு ரோட்டில் பைக் ஸ்டண்ட் செய்த ரோமியோவை தோப்புக்கரணம் போட வைத்த டிராஃபிக் போலீஸ்!

JananiGovindhan

மக்கள் போக்குவரத்து விதிகளை மீறக் கூடாத வகையில் அபராதம், லைசென்ஸ் ரத்து என பல்வேறு வகையான சட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தாலும், விதியை மீறி சாலையில் வாகனம் ஓட்டுவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

அவ்வாறு விதிமீறல்களில் ஈடுபடுவோர் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக பரவி வருவதும் வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் சத்தீஸ்கரின் துர்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விதிக்கு புறம்பாக பைக் ஓட்டி சாகசம் செய்த நபருக்கு போலீசார் தக்க தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.

அதன்படி, பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த அந்த இளைஞரின் வீடியோவை துர்க் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது.

அதில், அந்த இளைஞர் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் பொறுத்திய மோட்டார் சைக்கிளில் ஒரு பக்கமாக உட்கார்ந்துகொண்டு ஒரு கையால் ஆக்சிலேட்டரை திருகி வண்டியை ஓட்டியிருக்கிறார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சாகசம் செய்த இளைஞரை பிடித்து 4,200 ரூபாய் அபராதம் விதித்ததோடு, இனி இதுபோன்று செய்ய மாட்டேன் என தோப்புக்கரணனும் போட வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோவை கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.

துர்க் போலீசாரின் நடவடிக்கையை வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் பாராட்டியிருக்கிறார்கள். மேலும், கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் இதுப்போன்று விதிகளை மீறுவோரை கட்டுக்குள் வைத்திருங்கள் எனவும் பதிவிட்டிருக்கிறார்கள்.