கூடலூர் சட்டமன்ற தொகுதியில் முதன்முறையாக இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு அதிமுக மற்றும் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளரை தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள். நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு தேயிலைத் தோட்டமான டேன்டீ மற்றும் பிற பகுதிகளில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த தேர்தல்களில் தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டி வந்தனர். இந்தநிலையில் அண்மையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக தாயகம் திரும்பிய தமிழரான பொன்.ஜெயசீலன் என்பவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது.
இந்த நிலையில், இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்தக் கட்சி சார்பாகவும் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழரான காசிலிங்கம் என்பவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறது. முதன்முறையாக இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர் ஒருவர் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்ற செய்தி அந்த மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கூடலூரில் வசிக்கும் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் தங்களது பல ஆண்டுகால கோரிக்கைகளை தீர்க்கும் விதமாக வெற்றி பெறும் வேட்பாளர் இருப்பார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.