டிரெண்டிங்

ஜெயலலிதா ஆளுநருக்கு கடிதம் எழுதினாரா? சரவணன் சந்தேகம்

ஜெயலலிதா ஆளுநருக்கு கடிதம் எழுதினாரா? சரவணன் சந்தேகம்

Rasus

ஜெயலலிதா ஆளுநருக்குக் கடிதம் எழுதியதாகச் சொல்லப்பட்ட நாட்களில் அவர் வென்டிலேட்டரில் சுயநினைவின்றி இருந்ததாக திமுக மருத்துவர் அணி சரவணன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை நேற்று தொடங்கினார். விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்படட  பிரமாணப் பத்திரங்கள் அடிப்படையில் திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த சரவணனிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக கூடுதல் ஆவணங்களை விசாரணை ஆணையத்திடம் நாளை அதாவது இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக சரவணன்
கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் சரவணன் இரண்டாவது நாளாக இன்றும் ஆஜரானார். அப்போது, ஜெயலலிதா கைரேகை தொடர்பான விளக்கங்களை விசாரணை கமிஷனிடம் தெரிவித்தார். மேலும், ஆணையத்திற்கு தேவைப்படும் தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 23.09.2016 அன்று ஜெயலலிதாவால் அன்றைய ஆளுநருக்கு எழுதப்பட்ட கடிதத்தை காட்டிப் பேசினார். ஆனால் அன்றைய தினம் முதலமைச்சர் ஜெயலலிதா வென்டிலேட்டரில் சுயநினைவின்றி இருந்ததாக சரவணன் தெரிவித்தார்.  "என்னிடம் நடந்த விசாரணை நிறைவடைந்துள்ளது. தேவைப்பட்டால் மறுபடியும் அழைப்பதாக நீதிபதி கூறியிருக்கிறார். ஜெயலலிதாவின் கைரேகை, கையெழுத்தை தடயவியல்துறை ஆய்வு செய்ய ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மருத்துவர்களின் செய்தி அறிக்கைக்கும், மருத்துவ சிகிச்சை
அறிக்கைக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது" என்றும் சரவணன் கூறினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 100-க்கும்‌மேற்பட்ட தகவல்கள் விசாரணை ஆணையத்திற்கு வந்துள்ளன. அந்த தகவல்களை ஆய்வு செய்து, தேவையானவர்களை அழைத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார்.