டிரெண்டிங்

கைது நடவடிக்கையில் இருவேறு அணுகுமுறையா? : ஸ்டாலின் கடும் கண்டனம்

கைது நடவடிக்கையில் இருவேறு அணுகுமுறையா? : ஸ்டாலின் கடும் கண்டனம்

webteam

கருணாஸுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாடான போக்கு மிகவும் அநீதியானது, கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருணாஸ் கைது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தான் தெரிவித்த கருத்துக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும் அவரை வேண்டுமென்றே கைது செய்திருப்பது தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி, "ஆளுக்கொரு நீதி, வேளைக்கொரு நியாயம்" என்ற நிலையில் தான் அமல்படுத்தப்படுகிறது என்பது தெளிவாவதாக தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தையும், தமிழ்நாடு காவல்துறையையும் ஒட்டுமொத்தமாக மிகவும் கேவலமாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்ததால் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டும், இதுவரை பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச் ராஜா கைது செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதே போல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்ட எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்சநீதிமன்றமே கைது செய்ய தடைவிதிக்க மறுத்தும் கூட அவரை கைது செய்ய தயக்கம் காட்டுவது எந்த வகை அணுகுமுறை என்றும் விளங்கவில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கைது செய்யவேண்டியவர்களை அவர்களுடைய பின்னணியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கைது செய்யவேண்டும் என்றும், விடுவிக்க வேண்டியவர்களை உடனே விடுவிக்கவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.