டிரெண்டிங்

தொடங்கியது திமுக மனிதச் சங்கிலிப் போராட்டம்

தொடங்கியது திமுக மனிதச் சங்கிலிப் போராட்டம்

webteam

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனிதச் சங்கிலிப் போராட்டம்  தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் ‌நடக்கும் போராட்டத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், அதேபோன்று அதன் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தஞ்சையில் நடைபெறும் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், சென்னையில் நடைபெறும் மனிதச் சங்கிலியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

மேலும் சிவகங்கையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் கிருஷ்ணகிரி போராட்டத்தில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் கலந்துகொண்டுள்ளனர். திருவாரூரில் நடைபெற்றுவரும் மனிதச் சங்கிலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும், திருச்சி போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் பங்கேற்றுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.