டிரெண்டிங்

'என்னை வெல்ல எவர் இங்கு' - பாராட்டு மழையில் தோனியும் 'பினிஷிங்கும்'

'என்னை வெல்ல எவர் இங்கு' - பாராட்டு மழையில் தோனியும் 'பினிஷிங்கும்'

JustinDurai

உலக கோப்பை, டி-20, ஐபிஎல் என எந்த போட்டியாக இருந்தாலும் பெஸ்ட் மேட்ச் ஃபினிஷர் என்றால், அது தோனி தான். தன்னை மிஞ்ச ஆளே இல்லை என்பதை மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் தோனி.

மும்பை வான்கடே மைதானத்தில் 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட்டுன் இந்தியாவுக்கு வெற்றி தந்த தோனியின் ஸ்டைலிஷான ஃபினிஷிங்கை இன்றும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவ்வளவு எளிதில் மறக்க கூடிய வெற்றியா அது என்பது போல இருக்கும்.

தற்போது அதே மும்பையில், மும்பை அணிக்கு எதிராக சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் 40 வயதிலும் தானே பெஸ்ட் ஃபினிஷர் என நிரூபித்திருக்கிறார் தல தோனி. கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி, ஒரு டபுள்ஸ், மீண்டும் ஒரு பவுண்டரி என அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்திருப்பது அடுத்த இரு ஐபிஎல்லில் கூட தோனியால் விளையாட முடியும் என்ற நேர்மறையான விமர்சனங்களை கட்டி எழுப்பியிருக்கிறது.

ஆட்டத்தை பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர், ட்விட்டரில் தோனிக்கு வாழ்த்து மழை பொழிந்து இருக்கின்றனர். எம்.எஸ் தோனி. ஓம் ஃபினிஷாயா நமஹ. ரொம்ப நல்லா இருக்கு என ட்விட்டரில் தனது வாழ்த்தை தெறிக்கவிட்டிருக்கிறார் சேவாக். எம்எஸ்டி எப்போதும் சிறந்த ஃபினிஷர் என ஆகாஷ் சோப்ராவும், இப்போது முதல் மஞ்சள் ஆடையின் வெற்றி பவனியை காண முடியும் என ஸ்ரீகாந்தும் பதிவு செய்துள்ளனர். தோனியின் கைவண்ணத்தில் மிகப் பெரிய வெற்றி என விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, வெங்கடபிரசாத், ரஷீத் கான் ஆகியோரும் தோனியை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

கேஜிஎஃப் திரைப்படத்தில் ஒரு வசனம் இடம்பெறும். பத்து பேரை அடித்து நான் டான் ஆகவில்லை; அடித்த பத்து பேரும் டான். என கதாநாயகன் யஷ் பேசும்போது திரையரங்கமே அதிரும். அது போல், தோனியின் ஆட்டம் முடியவில்லை; அவர் ஆட்டத்தை முடித்து வைப்பவர் என முத்தாய்ப்பாக  சொல்லியிருக்கிறார் முகமது கைஃப்.

இதையும் படிக்கலாம்: 'பிளே ஆஃப்' சுற்றை விட்டு வெளியேறியதா மும்பை? 'கால்குலேட்டர்' சொல்லும் கணக்கு என்ன?