டிரெண்டிங்

“அண்ணாமலை சேர்ந்துள்ள இடம்தான் தவறானது: ஆனால், சசிகாந்த் செந்தில்... ”: தேவசகாயம் பேட்டி

“அண்ணாமலை சேர்ந்துள்ள இடம்தான் தவறானது: ஆனால், சசிகாந்த் செந்தில்... ”: தேவசகாயம் பேட்டி

sharpana

”நம் நாட்டின் ஜனநாயகம் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்துகொள்ளப்படும்போது, அரசு ஊழியராகப் பணி புரிவது தர்மமற்றது” என்று துணிச்சலுடன் கூறி, கடந்த ஆண்டு தனது ஐ.ஏ.எஸ் பணியை ராஜினாமா செய்த தமிழகத்தைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் தற்போது, தமிழக காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே, கர்நாடகா கேடரில் பணியாற்றிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தபோது, அதனை கடுமையாக விமர்சித்திருந்தார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம். இந்நிலையில், சசிகாந்த் செந்தில் அரசியலுக்கு வந்தது குறித்து என்ன சொல்கிறார் என்பதை அறிய, அவரிடம் பேசினோம்,

 சசிகாந்த் செந்தில் அரசியலுக்கு வந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

      “இந்தியாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 60 வயதுவரை பணியில் இருக்கலாம். பெரும்பாலான அதிகாரிகள் 60 வயதுவரை அரசின் சலுகைகள் எல்லாம் அனுபவித்து விட்டு ஓய்வு பெற்றப்பின்னே அரசியலுக்கு வருவார்கள். அப்படி, வட இந்தியாவிலும் வந்திருக்கிறார்கள். ஓய்வுபெற்றபின் வருவது என்பது ஆதாயத்திற்காகத்தான்.

ஆனால், சசிகாந்த் செந்தில் வெறும் 10 வருடங்கள் மட்டுமே இந்திய ஆட்சி பணியில் மக்களுக்காக உண்மையாக பணியாற்றிவிட்டு பாஜக அரசின் கொள்கைகள் பிடிக்காமல் ராஜினாமா செய்துள்ளார். அவரின் சர்வீஸ் முடிய இன்னும் 20 வருடங்கள் இருக்கும்போதே, ராஜினாமா செய்துள்ளார். அதிலேயே, அவரின் நேர்மையையும் மக்களுக்காக உழைக்கவேண்டும் என்ற சிந்தனையையும் தெரிகிறது.  ராஜினாமா செய்ததிலோ அரசியலுக்கு வந்ததிலோ அவருக்கு எந்தவொரு ஆதாயமும் கிடையாது.

      கட்சி சார்பற்று அதிகாரிகள் மக்கள் சேவை செய்யத்தான், இந்திய ஆட்சிப் பணி உருவானது. தேர்தலில் எந்தக் கட்சிக்குமே 50 சதவீத ஓட்டு கிடைக்காது. அதனால், ஓட்டுப் போடாத பகுதி மக்களின் நலன்களை புறக்கணிப்பார்கள். அப்படி, அவர்கள் புறக்கணித்தாலும், மக்களின் உரிமைகளைக் காப்பதும், ஜனநாயகத்தை பாதுகாப்பதும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்தான். அதனால், அவர்களுக்கு நிறைய பொறுப்புகளும் உள்ளன. இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் முடியாதபோது மக்கள் சேவை செய்யவேண்டும் என்று வருகின்ற நேர்மையான அதிகாரிகள் ராஜினாமா செய்யப்படும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    இப்படி அரசின் கொள்கைகள் பிடிக்காமல் வெளியேறி அரசியலுக்கு வருவதற்கும், 60 வயதில் ஓய்வுபெற்றபின் அரசியலுக்கு வருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சசிகாந்த் செந்தில், நினைத்திருந்தால் பாஜகவுக்கு ஆதரவாக இருந்து ஆதாயங்களை அடைந்திருக்காலாம். அப்படி செய்யாமல் ஜனநாயகத்தை காக்க துணிச்சலோடு அதுவும் காரணத்தை தெளிவாக சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அவரின் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது. இந்திய ஆட்சிப் பணியில் எப்படி மக்கள் சேவை செய்தாரோ, அப்படியே அரசியலிலும் நேர்மையாக செய்யப்போகிறார். அதனால், அவர் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன்.

      ஆனால், காங்கிரஸ் கட்சி தற்போது திசை தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது. உயிர்ப்புடனும் இல்லை. பீகாரில் 70 இடங்கள் கொடுத்தும், அக்கட்சியால் 20 இடங்கள் கூட வெற்றிபெற முடியவில்லை. சசிகாந்த் செந்திலைப் போன்ற துடிப்பானவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால், அக்கட்சிக்குதான் பலம்தான். அதுவும், சிவில் சர்வீஸ் தேர்வில் சசிகாந்த் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்திலும், தமிழக அளவில் முதலிடத்திலும் வந்திருக்கிறார். அவருக்கான முக்கியத்துவத்தை காங்கிரஸ் கட்சி கொடுக்கவேண்டும்.

 ஆனால்,  பணியில் இருந்துகொண்டே மக்கள் சேவை செய்திருக்கலாம் என்கிறார்களே?

     சகாயம் ஐ.ஏ.எஸ்ஸும் நேர்மையோடுதான் மக்கள் பணியாற்றினார். மக்களால் கொண்டாடவும் பட்டார். கடைசியில் என்ன ஆனது? நெருக்கடிகளாகக் கொடுத்து அவரை ஓரங்கட்டிவிட்டார்களே? அவரால், வெளிப்படையாக பேச முடியவில்லையே? எதையும் செய்ய முடியவில்லையே? அப்படி, ஏதாவது பேசினாலும் உடனே விதிமுறைகள் என்று நோட்டிஸ் கொடுத்து விடுவார்கள். பல்வேறு சிக்கல்களை உண்டாக்குவார்கள். இத்தனை ரிஸ்க்குகளையும் எடுத்துதான் சசிகாந்த் செந்தில் வெளியில் வந்திருக்கிறார். நேர்மையான அதிகாரிகளால் பாஜக ஆட்சியில் பணி புரிய முடியாது. பாஜக ஆட்சியில் மட்டும் ஏன் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு வருகிறார்கள் என்பதை யோசித்துப் பார்த்தாலே விடை கிடைத்துவிடும்.

முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை அரசியலுக்கு வந்ததை விமர்சித்த நீங்கள், சசிகாந்த் செந்திலை மட்டும் ஆதரிப்பது எப்படி?

அண்ணாமலை அரசியலுக்கு வருவதும் வராததும், அவரது உரிமை. ஆனால், போய் சேர்ந்துள்ள இடம்தான் தவறானது. பாஜக ஒரு மக்கள் விரோதக்கட்சி. அவர், திட்டம் போட்டு இணைந்ததால்தான், விமர்சித்தேன். அதற்காக, சசிகாந்த் காங்கிரஸில் சேர்ந்தது சரியானது என்று சொல்லவில்லை. அரசியலுக்கு வந்தது சரியான முடிவு. அவ்வளவுதான்.

- வினி சர்பனா