இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு சலுகை காட்டியதாக 7 டெல்லி காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாகக் கூறி டி.டி.வி.தினகரனிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை ஏப்ரல் மாதம் டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அவர் மீது நாடு முழுவதும் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. தென் இந்தியாவில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
விசாரணைக்காக பெங்களூர் அழைத்துவரபட்ட சுகேஷ் சொகுசு ஓட்டலில் தங்கி காதலியுடன் சுற்றி திரிந்துள்ளார். இது தொடர்பாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
பெங்களுரூவில் சுகேஷ் சந்திரசேகர் தங்கி இருந்த நாட்களில் சுதந்திரமாக சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு சலுகை காட்டியதாக டெல்லி போலீசார் 7 பேர் பணி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.