மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக இன்று அறிவித்துள்ளது. அதன்படி, மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக 20, காங்கிரஸ் 10, விடுதலை சிறுத்தைகள் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, மதிமுக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1, ஐஜேகே ஒரு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இதில், கோவை மற்றும் மதுரை மக்களவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். திருப்பூர், நாகை ஆகிய 2 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது.
இதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார் என்பது குறித்து முத்தரசன், நல்லக்கண்ணு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, திருப்பூர் தொகுதியில் சுப்பராயனும், நாகையில் செல்வராசும் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அறிவித்தார். நாகை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக ஏற்கனவே 3 முறை தேர்தெடுக்கப்பட்டவர் எம்.செல்வராசு.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் முன்னாள் எம்.பி பி.ஆர்.நடராஜனும், மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.