கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் நாளை நள்ளிரவு முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வரவுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக மாநகராட்சிப் பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொதுமுடக்கம் ஜூன் 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அத்தியாவசிய கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நேற்றைய நிலவரப்படி 705 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.