மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மாநிலத்துக்கான நிதியை தமிழக அரசு பெற வேண்டும் என அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், "மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கான நிதியை மாநில அரசு பெற வேண்டும். மக்களுக்கும், தொண்டர்களுக்கும், பதவிக்கும் இருக்கும் தொடர்புகளை ஆட்சியில் இருப்பவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தலைமைக்கழகத்திலே கதவைச் சாத்திக்கொண்டு, தீர்மானம் போட்டு கொள்ளைப்புற வழியாக யாராவது அபகரிக்கப்பார்த்தால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். இயக்கம் தான் பெரியது. தொண்டனின் விருப்பம்தான் முக்கியம். உங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
அட்டைக்கத்தி யுத்ததை விட்டு விடுங்கள். கையிலே ஆட்சி இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது என ஆணவம் கொள்ள வேண்டாம். கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கியமல்ல. தொண்டர்கள்தான் முக்கியம். அவர்களது எண்ணம் அறிந்து செயல்படுங்கள். தொண்டர்களின் எண்ணத்திற்கு மதிப்பளித்து செயல்படுங்கள். நீங்கள் தொண்டர்களின் சேவகர்கள். எஜமானராக நினைத்துக் கொள்ளாதீர்கள்" எனக் கூறினார்.