டிரெண்டிங்

“பேனர்கள், பட்டாசுகள், வீண் விளம்பரங்கள் வேண்டாம்” - தொண்டர்களுக்கு குமாரசாமி அன்பு கட்டளை

“பேனர்கள், பட்டாசுகள், வீண் விளம்பரங்கள் வேண்டாம்” - தொண்டர்களுக்கு குமாரசாமி அன்பு கட்டளை

rajakannan

முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில், வீண் விளம்பரங்கள் செய்ய வேண்டாம் என்று குமாரசாமி தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக அரசியலில் பல்வேறு அதிரடியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 37 எம்.எல்.ஏக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ள குமாரசாமிக்கு முதலமைச்சர் ஆகும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. ஆனால், எளிதில் அவருக்கு இது கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான உடன் 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், மஜத ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. குமாரசாமி முதலமைச்சர் ஆக பச்சைக்கொடி காட்டப்பட்டது. இதனால், குமாரசாமி தான் முதலமைச்சர் என்பது உறுதியானது போல் தோன்றியது. ஆனால், இந்த இடத்தில் ஆளுநர் ஒரு நாள் மவுனம் காத்து பின்னர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்ததால் குமாரசாமி சற்றே களங்கியிருப்பார். உச்சநீதிமன்றம் சென்றும் எடியூரப்பா பதவியேற்புக்கு தடைவிதிக்கப்படவில்லை. எடியூரப்பா பதவியேற்ற பின்னர் இன்னும் குமாரசாமிக்கு பிபி எகிறியிருக்கும். உச்சநீதிமன்றம் தளையிட்டு பின்னர் மறுநாளே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சொன்ன போதும் அவர் நம்பிக்கையுடன் இருந்திருப்பாரா என்பது தெரியாது. நம்பிக்கை வாக்கெடுப்பு அன்று எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்த போது தான் குமாரசாமி பெருமூச்சு விட்டிருப்பார். குமாரசாமி பதவியேற்க நாளை ஒரு நாள் தான் இடையில் உள்ளது. 

இந்நிலையில், தன்னுடைய கட்சி தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் கடிதம் ஒன்றினை குமாரசாமி எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “கட்-அவுட், பேனர்கள் வைக்க வேண்டாம், பொதுமக்களுக்கு தொந்தரவு தர வேண்டாம், பட்டாசுகள் வெடித்து சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்த வேண்டாம்” என்று வலியுறுத்தி இருந்தார்.  

அந்த கடிதத்தில், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி மூலம் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தது. நம்முடைய கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கடுமையாக உழைத்தனர். கர்நாடக மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் இல்லையென்றால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க மாட்டேன். நான் முதலமைச்சராக பதவியேற்கும் போது கொண்டாட்டங்கள் இருக்கும். இருப்பினும், மக்களுக்கு தொந்தரவு இல்லாமல், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாமல் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும். 

நம்முடைய கட்சி தொண்டர்கள் சமூக நீதிக்காக போராடுவார்கள் என்பது எனக்கு தெரியும். சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் என்னுடைய முன்னுரிமை உண்டு. நாம் அனைவரும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.