டிரெண்டிங்

திமுகவுக்கு தகுதி இல்லை : முதல்வர் பழனிசாமி விமர்சனம்

திமுகவுக்கு தகுதி இல்லை : முதல்வர் பழனிசாமி விமர்சனம்

webteam

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை என குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் மெகா கூட்டணியை கண்டு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நாகையில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். அப்போது பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

பின்னர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டிக்கு சென்ற அவர், கூட்டணியில் உள்ள தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுக அரசு விவசாயிகளுக்காக நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்ட பழனிசாமி, தான் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வருவதாக பெருமிதத்துடன் கூறினார். இதேபோல் வலங்கைமான், கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வலியுறுத்தினார். அப்போது அதிமுக மெகா கூட்டணியை கண்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தோல்வி பயத்தில் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் ப‌ரப்புரை மேற்கொண்டு வருகிறார் என்று விமர்சனம் செய்தார். 

இறுதியாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் மக்கள் மத்தியில் பேசிய அவர், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி அதிமுக வரலாற்று சாதனை படைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் நலத்திட்டங்களின் மூலம், கல்வித்துறையில் புரட்சியும், மறுமலர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.