டிரெண்டிங்

கவுரி லங்கேஷ் விவகாரம் : ராகுலுக்கு ரவிசங்கர் பிரசாத் கண்டனம்

கவுரி லங்கேஷ் விவகாரம் : ராகுலுக்கு ரவிசங்கர் பிரசாத் கண்டனம்

webteam

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியதற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் குறித்து ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவுகளில் பா.ஜனதாவையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் கடுமையாக சாடினார். தனது முதல் பதிவில், ‘பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் தாக்கவோ, கொல்லவோபடுகின்றனர். இயற்கையான இந்தியாவுக்கு எதிரான சித்தாந்தங்களை திணிக்கவேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்’ என்று அவர் கூறி இருந்தார்.

மற்றொரு பதிவில், “சில நேரங்களில் பிரதமர் உணர்ச்சிப்பூர்வமாக பேசுகிறார். ஆனால், அவருடைய முழுச் சிந்தனையும் எதிர்ப்பாளர்களை நசுக்கவேண்டும் என்பதுதாக இருக்கிறது. இதுதான் இந்தியாவில் பிரச்சினையை தீவிரமாக்குகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

பிரதமரை குறிவைத்து ராகுல்காந்தி கருத்து தெரிவித்து இருப்பதற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கவுரி லங்கேஷ் கொலையில் விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே ராகுல்காந்தி முந்திக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சும், வலது சாரி சிந்தனையாளர்களும்தான் இதில் ஈடுபட்டுள்ளனர் என குற்றம்சாட்டி அவரே தீர்ப்பும் வழங்கி உள்ளார். விசாரணையே தொடங்காத நிலையில் இதுபோல் கருத்து தெரிவிப்பது அவரைப்போன்றவர்களுக்கு அழகல்ல. இதுமாதிரியான தவறான கருத்தால் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் நியாயமான முறையில் விசாரணையை எதிர்பார்க்க முடியுமா?... கவுரிக்கு போதிய பாதுகாப்பை கர்நாடக அரசு அளிக்க தவறிவிட்டது" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “பத்திரிகையாளர் கொலையில் தாராளவாத சிந்தனைகள் குறித்து பேசுபவர்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் கொல்லப்பட்டால் மவுனம் காப்பது ஏன்?...கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர் அண்மையில் கொல்லப்பட்டாரே, அப்போது இந்த சித்தாந்தம் எங்கே போனது?” என்றும் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.